The PPST Group
Celebrating the Birth Centenary of Shri Dharampal
மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்
ஆகச்ட் 16, 2021
கோவிட் தொற்றைத் தடுப்பதற்கும், குணப்படுத்துவ-தற்கும் இந்திய மருத்துவ முறைகளைச் செம்மையா-கவும், முழுமையாகவும் உபயோகிக்க கோரிக்கை.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, உலகமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஆயுர்வேதம், சித்தம் மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவமுறைகள் கோவிட் தடுப்பிலும், சிகிச்சையிலும் பரவலாக உபயோகிக்கப்பட்டுள்ளன. ஆயுஷ் (AYUSH) அமைச்சரகத்தின் கீழ்வரும் பல நிறுவனங்கள், அமைப்புகள் திரட்டியுள்ள தகவல்கள் இம்மருத்துவங்களின் பரவலான பயன்பாட்டையும், திறமையையும், வெளிப்படுத்துவதாக உள்ளன.
ஆயுஷ் அமைச்சரகத்தின் பல்வேறு முனைப்பாடுகளில் இரண்டை குறிப்பிட்டுச் சொல்லலாம். [1]
1. தில்லியிலுள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் 80,000 தில்லி காவலர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஆய்வை மேற்கொண்டது. ‘ஆயுஷ் ரக்ஷா’ என்ற பெயரில் நடந்த இந்த ஆய்வில், கோவிட் தொற்று வராமல் தடுக்கும் பொருட்டு ஆயுர்வேத மருந்துகள் கொண்ட பெட்டி காவலர்-களுக்கு வழங்கப்பட்டது. தில்லியில் ஏற்பட்ட கோவிட் தொற்று மரணங்களில் தில்லி காவலர்களின் எண்ணிக்கை மற்றவர்களைவிட குறைந்த விகிதத்தில் காணப்பட்டது. மேலும், ஜுன் 15 முதல் தில்லி காவலர்களிடம் கோவிட் தொற்றின் பரவல் குறையத் தொடங்கியது. அதே சமயம் தில்லியின் மக்களிடம் தொற்றின் பரவல் மிகவும் அதிகரித்து ஓர் உச்சத்தைக் கண்டது. மேலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டபோது தில்லியின் காவலர்களிடம் கோவிட் தொற்று குறைந்து காணப்பட்டது. அதே போல தில்லி காவலர்களின் கோவிட் மரணங்களின் விகிதம் மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே காணப்பட்டது.
2. சுமார் 600 கோவிட் நோயாளிகள் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 99.5 சதவிகிதத்தினர் கடந்த 11 மாதங்களில் பூரண குணமடைந்துள்ளனர்.
மத்திய ஆயுஷ் அமைச்சரகம் மற்றும் பல மாநில அரசுகள் இந்திய மருத்துவ முறைகளின் கோவிட் தடுப்பு மருந்துகளையும், தடுப்பு நடைமுறைகளையும் பெருமளவுக்கு ஊக்குவித்து வந்துள்ளன. ‘ஆயுஷ் சஞ்சீவினி’ என்ற செயலி திரட்டியுள்ள தகவல்களின்படி, இந்திய மருத்துவங்களின் தடுப்பு மருந்துகளும் நடைமுறைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது தெரிகிறது. மிகப் பெரிய அளவிலும், எண்ணிக்கையிலும் மக்கள் நாட்டு மருந்துகளை தொடர்ந்து உபயோகித்து வருகின்றனர். இக்காரணங்களால் தான் இந்தியாவில் கோவிட் தொற்றின் தீவிரத்தையும், பரவலையும் (முதல் கோவிட் அலையின் சமயத்தில்) மட்டுப்படுத்த முடிந்தது என்று கொள்வதில் தவறில்லை.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் தவிர, நாடெங்கும் பல வைத்தியர்கள் கோவிட் எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஒரு மருத்துவர் மிகவும் குறிப்பிடத்தக்கவாறு இதில் வெற்றியை ஈட்டியுள்ளார். அவர் 600க்கும் மேற்ப்பட்ட கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், மற்றும் பல்வேறு நோய்களால் (comorbidities) தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த கோவிட்நோயாளிகளையும் (இரண்டு நோயாளிகளின் மரணம் தவிர்த்து) குணப்படுத்தியுள்ளார். அவருடைய முதல் 167 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மிகவும் விவரமான சிகிச்சை முறையையும், அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியல் பூர்வமான முறையில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஜே.ஏ.ஐ.எம். என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. [2]
தவிர பல மிகத்தீவிர நோய்களுடன் (severe comorbidities) பாதிக்கப்பட்ட சில கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் அடங்கிய விரிவான கட்டுரை அதே பத்திரிகையின் மற்றொரு இதழில் வெளியாகியுள்ளது. [3]
மேலும் இது போன்ற வெற்றிகரமான இந்திய மருத்துவ முயற்சிகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 4,200 படுக்கை வசதிகள் கொண்ட 24 சித்த மருத்துவ கோவிட் மையங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மிகவும் பிரபலமான சித்த மருத்துவர் ஒருவர் 870க்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவர்களில் யாரும் இறக்கவில்லை (5 நபர்கள் மட்டும் சிகிச்சையை நடுவில் நிறுத்திக் கொண்டனர்). பெங்களூரில் அதேபோல் சுமார் 400 நோயாளிகள் (தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட) சிகிச்சை பெற்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. மீரட் நகரிலுள்ள நவீன மருத்துவமனையொன்று ஆயுர்வேதம் மற்றும் நவீன முறைகளை இணைத்து சிகிச்சையளித்து வருகிறது. ஆயுர்வேத மருத்துவர்களின் உதவியுடன் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆயுர்வேத சிகிச்சை பெற்ற நோயாளிகள் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக அந்த மருத்துவமனை கூறுகிறது. இது போன்ற தகவல்களும், விவரங்களும் ஆயுஷ் அமைச்சரகத்திடமும், பல்வேறு மாநில அரசுகளிடமும் உள்ளன.
இந்திய மருத்துவ முறைகளை நவீன மருத்துவ சிகிச்சை முறைகளுடன் ஒப்பிட்டு நோக்க மேற்சொன்ன இவை மட்டுமே போதாது. ஆயினும் இவை இந்திய மருத்துவ முறைகளின் முயற்சிகளைப் பற்றிய சில கூறுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன.
1. பாதுகாப்பு: இந்திய மருத்துவங்களை கோவிட் நோயாளிகள் பக்கவிளைவுகள் இல்லாமல் உபயோகிக்கலாம். இந்திய மருத்துவமுறைகளால் சிகிச்சைப்பெற்ற மேற்கூறிய நோயாளிகள் எவருமே சிகிச்சை பலனின்றி, நோய் முற்றின ஆபத்தான கட்டத்திற்குச் சென்ற தகவல்கள் எதுவும் இல்லை. இந்திய மருத்துவமுறைகள் பல நூற்றாண்டுகளாக உபயோகத்திலுள்ள மருந்துகளை கொண்டுள்ளன. அவையெல்லாம் காலங்காலமாக, எவ்வித கெடுதலுமின்றி, பாதுகாப்பானவையாக உபயோகத்தில் உள்ளவை.
2. செயல்திறன்: இந்திய மருத்துவ முறைகளை நோய் வராமல் தடுக்க உபயோகிப்பவர்களில் தொற்று ஏற்பட்டவர்களும், தொற்றாலுண்டான மரணங்களும் மிகவும் குறைவு. சிகிச்சைக் காலமும் மரணங்களின் விகிதமும் குறைவாகவே உள்ளன. மேற்குறிப்பிட்டவை இந்திய மருத்துவங்களின் சிகிச்சை முறைகள் மிகுந்த செயல்திறனுடையவை என்பதைக் காட்டுகின்றன.
மேலும் கோவிட் தொற்று நோய்க்கான மருந்து என்று எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், எந்த புதிய சிகிச்சை முறையும் குறைந்தபட்சம் பாதுகாப்பானதாகவும், செயல்திறனுடையதாகவும் இருக்க வேண்டும். அவசர அனுமதியளிக்கப்பட்ட பல நவீன கோவிட் சிகிச்சை முறைகள் குறைந்தபட்ச பாதுகாப்பும் திறனும் கூட பெற்றவையாக உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றி ஆயுஷ் அமைச்சரகம் திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையிலும், ஆயுர்வேத மற்றும் இந்திய மருத்துவங்களைச் சார்ந்த பலரின் அனுபவங்களின் அடிப்படையிலும், இந்திய மருத்துவ முயற்சிகளை கோவிட் தடுப்புக்காகவும் அதன் தீவிர சிகிச்சையிலும் அனுமதிப்பது உகந்ததாகும். இந்திய மருத்துவங்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நம் நோயாளிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க சிகிச்சை முறைகள் சென்றடைவதைத் தடுப்பதற்கு ஒப்பான செயலாகும்.
ஆகவே, நாங்கள் மாண்புமிகு பிரதமரிடம் கீழ்க்கண்டவற்றை வேண்டுகிறோம் :
1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதத்திலும், நோயைத் தடுப்பதற்கும் செயல்படும் இந்திய மருத்துவமுறைகளை இலவசமாக எல்லோரும் பயனடையும் விதத்தில் அளிக்க வேண்டும். பொது மருத்துவமனைகளிலும், ஆரோக்கிய மையங்களிலும் இதை அமல் படுத்த வேண்டும்.
2. கோவிட் சிகிச்சையளிக்கும் எல்லா அரசு நிறுவனங்களிலும், குறைந்தபட்சம் மாவட்ட மருத்துவ நிலையங்களிலாவது, அரசு வழங்கும் சிகிச்சையைத் தவிர, நோயாளிகள் விரும்பினால், இந்திய மருத்துவ முறை சிகிச்சையும், மருந்துகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த நிலையங்களில், ஆயுஷ் அமைச்சரகம் நியதிப்படுத்தியுள்ளபடி இந்திய மருத்துவ சிகிச்சையை அளிக்க இந்திய மருத்துவத்தில் தேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
3. இந்திய மருத்துவ முறை சிகிச்சையை விரும்பி ஏற்கும் நோயாளிகளில் 10-20 சதவிகிதத்தினர் இந்திய மருத்துவ சிகிச்சையை மட்டும் (standalone treatment) தேர்வு செய்ய அனுமதியளிக்க வேண்டும். தேவை ஏற்படின் அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்ற உறுதி அளிப்பது அவசியம்.
4. சிகிச்சைகள் குறித்த தகவல்களைத் திரட்டவும், இத்திட்டம் சரியாக செயல்படவும், ஆயுஷ் அமைச்சரகம் மற்றும் சுகாதார அமைச்சரகம் (Health Ministry) இணைந்து செயல்பட்டு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கணினி வழியாக பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட வேண்டும். இத்தகைய டிஜிட்டல் கட்டமைப்பு சுகாதார அமைச்சரகத்தின் சேவைகள் எல்லா இடங்களையும் சென்றடையவும், வருங்காலங்களில் அவற்றைப் பயன்படுத்தவும் வழி வகுக்கும்.
மேற்குறிப்பிட்டுள்ளவைகளைத் தற்போது நடைமுறையில் உள்ள ‘தேசிய ஆயுஷ் மிஷன்’ (National Ayush Mission ) என்பதின் ஒரு பகுதியாக செயல்படுத்த முடியும். அவ்வாறு செய்லபடுத்தப்படும் போது, நாடெங்குமுள்ள கோவிட் நோயாளிகள் தற்போது பெற்று வரும் சிகிச்சைகளோடு, இந்திய மருத்துவ சிகிச்சையைத் தேர்வு செய்ய வழிவகுக்கும். மேலும், இந்திய மருத்துவத் துறைகளில் தேர்ந்த பல லட்சக் கணக்கான மருத்துவர்களை கோவிட் எதிர்ப்புப் போரில் ஈடுபடுத்த முடியும். நாடு தழுவிய கோவிட் எதிர்ப்பு பணியில் இந்திய மருத்துவமுறைகளைத் தகுந்த வழியில் பயன்படுத்தவும் வழிசெய்யும்.
இவை சில மாதங்களில் நமக்கு விரிவான அறிவியல்பூர்வமான தகவல்களைத் திரட்டிக் கொடுத்து, இந்திய மற்றும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை ஒப்பிட்டு நோக்க வழிசெய்யும். இப்படி திரட்டப்படும் தகவல்கள் இந்திய மருத்துவங்களின் திறனை நிரூபிப்பதோடு அவற்றின் மதிப்பும், கௌரவமும் உயர வழிவகுக்கும். நவீன மற்றும் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகள் இணைந்து செயல்படவும் அவ்விரண்டைவும் சரியான அளவில், பக்குவமாக பயன்படுத்தவும் வழிசெய்யும்.
பெரும் சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ளும் சமயங்களில் தான், நாடுகள் மாபெரும் பணிகளை மேற்கொள்கின்றன. நாம் எதிர்காணும் கோவிட் பெருந்தொற்றும் இத்தகைய ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது. இப்போது நாம் நமது வழிவந்த வளமான இந்திய மருத்துவ முறைகளைப் பயன்படுத்த ஒரு பெரும் வாய்ப்பை பெற்றுள்ளோம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய மருத்துவங்களின் செயல்திறனை உலகளவில் பறைசாற்ற வழிவகுப்போம்.
-
Nesari TM. Integration of Ayurveda in COVID-19 management: Need of an hour. J Ayurveda Case Rep [serial online] 2021 [cited 2021 Jul 5]; 4:1-2. Available from:
http://www.ayucare.org/text.asp?2021/4/1/1/318661 -
P.L.T. Girija, Nithya Sivan, Yamini Agalya Murugavel, Pallavi Naik, T.M. Mukundan, Monica Duraikannan, “Standalone Ayurvedic Intervention with Home Quarantine in COVID-19 - Outcomes of Clinical Practice”, Journal of Ayurveda and Integrative Medicine, 2021;04-15. Available from: https://doi.org/10.1016/j.jaim.2021.04.015
-
P.L.T. Girija, Nithya Sivan, Pallavi Naik, Yamini Agalya Murugavel, M. Ravindranath Thyyar, C.V. Krishnaswami, “Standalone Ayurvedic treatment of high-risk COVID-19 patients with multiple comorbidities: A case series”, Journal of Ayurveda and Integrative Medicine, 2021;06-06. Available at: https://doi.org/10.1016/j.jaim.2021.06.006